Friday, July 15, 2011

கொல்லாமல் கொல்கிறாய் …!

கண்களை மூடினால்
கனவில் வருகிறாய்….

விழித்துப் பார்த்தால்
எதிரில் நிற்கிறாய்…

பூக்களில் நீயே
புன்னகைக்கிறாய்…

ஒவ்வொரு அணுவிலும்
ஒட்டிக்கொள்கிறாய்…

தொட்டுப்பேசினால்
எட்டிப்போகிறாய்….

தொடாமல் போனால்
வாடிப்போகின்றாய்….

எனைக் கொல்லாமல் கொன்று
நீ இம்சிக்கிறாய் ….

எதிரி என்று உன்னை
எதிர்த்து நிற்கவா?
தோழி என்று
உன் தோளில் சாயவா?

நீ இல்லாத நேரம்...!

இருள் சூழ்ந்திருந்த
என் வீட்டிற்குள்
வெளிச்சமென நீ வந்தாய்….

வானத்து தேவதையைப்போல
உன் வரவு இருந்தது…..
அந்த நொடியே
நான் உணர்ந்து விட்டேன்
எனக்கானவள் நீதான் என்று…

நீ வரும் வரை
தனிமை மட்டுமே
எனக்கு துணையாக இருந்தது….

உன்னை சந்திக்கும் வரை
சூரியன் உதிப்பதும்
சந்திரன் எழுவதும்
தினசரி நிகழ்வு மட்டுமே….

உன்னைக்கண்ட பின்புதான்
பருவகால மாற்றங்கள் கூட
எனக்காகத்தான்
என்பதை புரிந்து கொண்டேன்….

நீ சிரித்தால் வசந்தகாலம்
நீ பேசினால் கார்காலம்
நீ இல்லாத நேரம் மட்டுமே
இலையுதிர்காலம்…

காதலை வெற்றிகரமாக்குவதில் யார் கில்லாடி

காதல்…. ஒரு மென்மையான உணர்வு. அதை உணர்வது பிரத்யேகமான ஒன்று. காதலிப்பதை காட்டிலும் காதலிக்கப்படுவது அனைவருக்கும் பிடித்தமானது. நம்மை நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி நம்மை சாதிக்க வைக்கும்.

காதலிக்கும் தருணங்கள் மிக இனிமையானவை. சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட்கள், மாலை நேர சந்திப்புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தருணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கும்.

காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின்னும் என்றும் உதிராது நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் உண்மையானது. அத்தகைய காதலை வெற்றியாக்கி திருமண வாழ்க்கையிலும் சாதிக்க சில

யோசனைகள்:

மனதளவில் தயாராகவேண்டும்

திருமணத்திற்கு மனதளவில் தயாரான பிறகே காதலை திருமணத்திற்குரிய கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதுவரை காதலிப்பதில் தவறில்லை.

தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு பயந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

வாழ்க்கைத்துணையின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ரசனைகள் இவையெல்லாம் கடைசி வரை ஒத்துப்போகுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.

இயல்பாய் இருங்கள்

காதலிக்கும் நபர்கள் இயல்பான குணத்துடன் பேசிப்பழகுங்கள். முதலில் இயல்பை மறைத்துவிட்டு திருமணத்திற்குப்பின்னர் இயல்பான குணம் வெளிப்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது.

வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரிவராது என்று மனதில்பட்டால், உடனே பக்குவமாக பேசி உறவை முறித்துக்கொள்வதில் தவறில்லை.

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் துணையுடன் திருமணத்திற்கு முன்பே பேசிவிடுவது சிறந்தது. திருமணத்திற்கு பிந்தைய குழப்பங்கள் ஏற்படுவதை இது தவிர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்களைப்பற்றியும் காதலிக்கும் போதே பேசிவிடுவது மிகவும் முக்கியம்.

காதல் என்பது எதுவரை

தன்னை விரும்பும் ஆண் உலகத்திலேயே தன் மீது மட்டும்தான் அதிக அளவில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பு.

காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின்றனர்.

காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார்த்தமான நெருக்கம், கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந்து விடுகிறது. எனவே காதலை உடல் ரீதியாக அணுகுவதை விட உள்ளரீதியாக அணுகுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

யாராக இருந்தாலும் நூறு சதவிகிதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் எண்பது சதவிகிதம் ஒத்துப்போகும் நபர் நமக்கு துணையாய் அமைந்தால் மணம் முடித்து வாழ்க்கைப் பயணத்தை இனிதாக தொடங்குவதில் தவறில்லை.

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள"வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

Tuesday, July 5, 2011

வானவில்

உன் உடைந்த
கண்ணாடி வளையல்கள்
ஒன்றாகி
வனத்தில்
கோலம் போட்டதோ...
வானவில் !

கரையும் ஆயுள்

ஓயாமல் அலைகள்
வந்து தாக்கினாலும்
கரையின்
நிலையில் நான் !

மலையை
தகித்துக் கொண்டிருக்கும்
எரிமலையாய்
என் உணர்வுகளை
எரிந்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவு !

நீ
விளக்கை அணைத்து
சுகமாய்
தூங்கும் இரவுகளில்
உன் நினைவுகளை நினைத்து
கரைந்து போகிறது
ஆயுள் !

நீ வரும் வழியில்
நின்றால்
பார்த்தும் பார்க்காமல்
போகிறாய்
விரைவுப் பெருந்தாய் !

உனது
போக்கிற்கான
காரணங்களுக்கு
விடை காண முடியாமல்
தவிக்கிறது
என் இதயத் துடிப்பு !

பெண்ணே
மதிவேல்லுமாம்
இங்கே
மதியை வென்ற வரலாறு
உனக்கு மட்டுமே உண்டு !